டிரம்புக்கு சிறைதண்டனை? : ஆபாச நடிகை வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு
வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கின் தண்டனை விவரம், வரும் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
2016ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது, அமெரிக்க ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ், டிரம்ப் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்தார்.
தனது தேர்தல் வெற்றிக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஸ்டோர்மி டேனியல்ஸை மேலும் பேசவிடாமல் தடுக்க ட்ரம்ப் முயற்சி செய்தார். அதற்காக, தனது வழக்கறிஞர் மூலம் ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு ஒரு பெரிய தொகையை ட்ரம்ப் கொடுத்துள்ளார்.
தன் சொந்த பணத்தில் இருந்து வழக்கறிஞர் ஆபாச நடிகைக்குக் கொடுத்த பணத்தை, தேர்தல் நிதி
கணக்கில் 'வழக்கறிஞருக்கான கட்டணம் ' என ட்ரம்ப் காட்டியுள்ளார்.
அமெரிக்க சட்டப்படி ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்தது தவறில்லை. ஆனால், 'வழக்கறிஞருக்கான கட்டணம் ' என்று பொய் கணக்கு காட்டியது சட்டப்படி தவறாகும். இதனால், டிரம்ப் மீது 34 வழக்குகள் தொடரப்பட்டன.
ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுக்களில், கடந்த மே மாதம் ட்ரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அப்போதே டிரம்புக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது.
இந்த வழக்கில் இருந்து நிராபராதியாக வெளிவர டிரம்ப் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. கடந்த நவம்பர் 26 ஆம் தேதியே டிரம்புக்குத் தண்டனை வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தண்டனை தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து, ட்ரம்ப் செய்த மேல் முறையீடு மனுவும், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, நீதிபதி ஜுவான் மெர்ச்சன், குற்றவாளியான ட்ரம்புக்கான தண்டனை விவரம் வரும் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காரணத்தால் , சிறைத்தண்டனை இல்லாமல், அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி, ட்ரம்ப் நேரிலோ அல்லது ஆன் லைனிலோ கலந்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்த தண்டனையைக் குறித்து, டிரம்ப் , இது ஒரு "சட்டவிரோத அரசியல் தாக்குதல்" என்று விமர்சனம் செய்துள்ளார். டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், இந்த உத்தரவை "சூனிய வேட்டை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
டிரம்புக்குத் தண்டனை வழங்குவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்பதைக் கண்டறிந்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில், ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றதும், தண்டனையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே, குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் அதிபராக பதவி ஏற்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.