டெல்டா மாவட்டங்களில் மழை!
நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்..
இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கல்லணையில் இருந்து ஆறுகளில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் சீர்காழி , தரங்கம்பாடி, கொள்ளிடம் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 15 புள்ளி 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், படகுகளை மீனவர்கள் கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. மேலும், தாழங்குடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.