டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் மோடி உறுதி!
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று, தாமரை மலரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும், மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும், உலகின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தலைநகர் டெல்லியை வளர்ந்த இந்தியாவின் தலைநகராக உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். டெல்லியை முன்னேற்றும் எந்த திட்டமும் ஆம் ஆத்மியிடம் இல்லை என குற்றச்சாட்டிய பிரதமர், டெல்லி மக்கள் ஆம் ஆத்மி ஆட்சியில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாகவும் விமர்சித்தார்.
குறிப்பாக இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நகரமாக டெல்லி இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.