செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டேட்டா திருட்டு வழக்கு : கத்தாரில் இந்திய IT வல்லுநர் கைதான பின்னணி என்ன?

06:05 AM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டேட்டா திருட்டு வழக்கில் இந்தியத்  தொழில்நுட்ப வல்லுநரான அமித் குப்தா, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கத்தாரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். யார் இந்த அமித் குப்தா ?  ஏன் கத்தார் அதிகாரிகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் ? என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த அமித் குப்தா, இந்தியத் தொழில்நுட்ப வல்லுநராவார். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள அமித் குப்தா, பிறகு, டெல்லியின் சர்வதேச மேலாண்மை நிறுவனத்தில் MBA முடித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியைத் தொடங்கிய அமித் குப்தா, அதன்பிறகு மூன்று ஆண்டுகள், நியூக்ளியஸ் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக டெக் மகேந்திராவில் பணியாற்றும் அமித் குப்தா, தற்போது அந்நிறுவனத்தின் கத்தார் மற்றும் குவைத் பிராந்தியத் தலைவராக உள்ளார்.

Advertisement

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்துவரும் அமித் குப்தா கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி, தோஹா பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப் பட்டிருக்கிறார். டேட்டா திருட்டு புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அமித் குப்தா மீதான குற்றச்சாட்டுகள் எதையும் கத்தார் அரசு வெளியிடவில்லை. ஆனாலும், தம் மகன் மீது பொய்யாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளதாக,அமித் குப்தாவின் தாயார் புஷ்பா தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஒவ்வொரு புதன்கிழமையிலும்  போனில் 5 நிமிடம் மட்டுமே  மகனுடன்  பேச அனுமதிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.  சமீபத்தில், தனது மகனை நேரில் பார்க்க தோஹாவுக்குச் சென்ற அமித் குப்தாவின் தாயாருக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிறகு, இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்னரே அவரை பார்க்க அனுமதித்துள்ளனர்.

கைது இது தொடர்பாக, விளக்கமளித்துள்ள டெக் மகேந்திரா நிறுவனம், அமித் குப்தாவின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்கள் முன்னுரிமை என்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்  கூறியுள்ளது.

அமித் குப்தாவின் மனைவி, மற்றும் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டு உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். குப்தாவின் விடுதலையை உறுதி செய்ய ,மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, வதோதரா நாடாளுமன்ற உறுப்பினரான ஹேமங் ஜோஷி தெரிவித்துள்ளார்.

டெக் மகேந்திராவில் யாரோ ஒரு ஊழியர் செய்த தவறுக்கு அமித் குப்தா கைது செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.  அவசர நடவடிக்கை எடுத்து, அமித் குப்தாவை மத்திய அரசு காப்பாற்ற வேண்டுமென்றும் அவரின் குடும்பத்தினர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

2022ம் ஆண்டுக்குப் பிறகு, கத்தார் அரசு இந்தியரைக் கைது செய்து  சிறையில் அடைப்பது,  இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  இத்தாலியின் உயர் தொழில்நுட்ப நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறும் தோஹாவின் திட்டத்தை உளவு பார்த்ததாக எட்டு முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் உட்படப் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2023 ஆண்டு, கத்தார் நீதிமன்றம், எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், பிரதமர் மோடியின் தலையீட்டால்,  கத்தார் அமீர் 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களை விடுவித்தார். அனைவரும் அப்போது பத்திரமாக இந்தியாவுக்குத் திரும்பினர் .

குப்தாவின் குடும்பத்தினருடனும், கத்தார் அதிகாரிகளுடனும் இணைந்து செயல்பட்டு வரும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம், அனைத்து சாத்தியமான உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும் அமித் குப்தாவின் வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Tags :
அமித் குப்தாFEATUREDMAINData theft case: What is the background behind the arrest of an Indian IT professional in Qatar?டேட்டா திருட்டு வழக்கு
Advertisement