ட்ரம்பின் எல்லை பேரரசர் டாம் ஹோமன் : கனடாவுக்கு நெருக்கடி? - சிறப்பு கட்டுரை!
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் அளிப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்காவும் தற்போது கனடாவை எச்சரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கெனவே, ட்ரம்ப், கடினமான கேள்விகளுக்கு தயாராக இருக்குமாறு கனடாவை எச்சரித்த நிலையில், கனடாவின் குடிவரவு அமைச்சர், எல்லைப் பிரச்சினைகளில் "கடினமான கேள்விகளை" எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், தனது முந்தைய அரசில், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் செயல் இயக்குநராக பணியாற்றிய டாம் ஹோமனை, நாட்டின் எல்லைகளுக்கு 'THE BORDER CZAR ' ஆக இருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினரை, அவரவர்கள் பூர்வீக நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கு டாம் ஹோமன் பொறுப்பேற்பார் என்றும், அமெரிக்காவின் தெற்கு எல்லை, வடக்கு எல்லை, அனைத்து கடல்சார் மற்றும் விமானப் பாதுகாப்பு பணிகளுக்கும் பொறுப்பேற்பார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடக்கு எல்லையில் உள்ள நெருக்கடியை சரி செய்வதே தனது முன்னுரிமையாக இருக்கும் என்று கூறியுள்ள டாம் ஹோமன், கனடாவின் மனித கடத்தல் நடவடிக்கைகளின் அச்சுறுத்தலைத் தடுப்பதே நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
மனித கடத்தல் என்பது கனடாவில் ஒரு இலாபகரமான வணிகமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. திட்டமிடப் பட்ட அமைப்பு ரீதியிலான கனடா குற்றவியல் குழுக்கள் இந்த மனித கடத்தலில் ஈடுபடுகின்றன. சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய, ஒரு நபருக்கு 1,500 முதல் 6,000 அமெரிக்க டாலர் வரை கட்டணம் வசூலிக்கப் படுகின்றன.
பெரும்பாலும் இந்த மனித கடத்தல், கனடாவின் டொராண்டோ அல்லது மாண்ட்ரீலில் தொடங்கி வெர்மான்ட் மற்றும் நியூயார்க் போன்ற அமெரிக்க மாகாணங்களில் முடிகின்றன.
கடந்த 12 மாதங்களில் 97 நாடுகளைச் சேர்ந்த 19,000 க்கும் மேற்பட்ட மக்கள், அமெரிக்க எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க எல்லைக் காவல்படையின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த 17 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களை விட அதிகமாகும். அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், லட்சக் கணக்கான சட்ட விரோத குடியேறியவர்களை நாடு கடத்த போவதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் உறுதி அளித்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய டாம் ஹோமன், சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய லட்சக் கணக்கான வெளிநாட்டினர், தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப தயாராக இருங்கள் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், நியூயார்க் நகரில் யூத மக்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் அமெரிக்காவுக்குள் நுழைய திட்டமிட்டிருந்த ஒரு பாகிஸ்தானியரை குபெக்கில் கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட டாம் ஹோமன் , கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பாதுகாப்பை கனடா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதனை தொடர்ந்து, டாம் ஹோமன், சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாள்வதற்கான சில திட்டங்களையும் விவரித்திருக்கிறார்.கனடாவில் தீவிரவாதம் அதிகரித்து வருவதாகவும், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக கனடா இருப்பதாகவும் இந்தியா நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.
சட்டவிரோத எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள், பயங்கரவாத தொடர்புகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய பல ஆதாரங்களை இந்தியா வழங்கிய போதிலும், கனடா அதற்கு செவிசாய்க்கவில்லை.
குறிப்பாக,50 க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, பணம் பறித்தல் மற்றும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களில் குற்றவாளியான அர்ஷ் டல்லா, இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு ஜூலையில் இந்திய அரசாங்கம் அர்ஷ் டல்லாவை கைது செய்யுமாறு கனடாவிடம் இந்தியா வைத்த கோரிக்கையை கனடா நிராகரித்தது. இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டாலும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அர்ஷ் டல்லா மட்டுன்றி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட, 26 குற்றவாளிகளை ஒப்படைக்குமாறு இந்தியா வைத்த கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவும் கனடாவுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.