செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ட்ரம்பின் 'பரஸ்பர வரி' : iPhone விலை ரூ.2 லட்சம்?

06:45 PM Apr 07, 2025 IST | Murugesan M

இந்தியா மீது ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி காரணமாக ஐபோன்களின் விலை 43 சதவீதம் வரை  அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இனி, ஒரு ஐபோனின் விலை 2 லட்சம் ரூபாய் ஆனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

Advertisement

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரி மற்றும் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப அதிகபட்சம் 40 சதவீதம் வரை பரஸ்பர வரி விதித்துள்ளார். இந்த பரஸ்பர வரி விதிப்பால் சர்வதேச வர்த்தகம் பாதிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு  54 சதவீதமும், வியட்நாமுக்கு 46 சதவீதமும் இறக்குமதி வரி விதித்துள்ள ட்ரம்ப், இந்தியாவுக்கு 26 சதவீத வரியை அறிவித்திருக்கிறார். சமீபத்தில்தான் மத்திய அரசு, பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்தது. இந்நிலையில், அமெரிக்கா விதித்த 26 சதவீத வரி, நாட்டின்  ஏற்றுமதிக்கு ஒரு குறிப்பிடத்தக்கச் சவாலை முன்வைத்துள்ளது.

Advertisement

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் 220 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை விற்பனை செய்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளே ஐபோன்களின் மிகப்பெரிய சந்தையாகும்.

ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான ஐபோன்களை சீனாவில் உற்பத்தி செய்கிறது.  2016ஆம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்க அதிபரான ட்ரம்ப்  சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதித்தார். அப்போது தான், தனது உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு மாற்றிய ஆப்பிள் நிறுவனம், 2017ஆம் ஆண்டு முதல், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஐபோன்களை  இந்தியாவில் தயாரித்து வருகிறது.

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 5 கோடி ஐபோன்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ள ஆப்பிள் நிறுவனம்   இந்தியாவில் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரித்து வருகிறது.  கடந்த ஆண்டு மொத்த ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 14 சதவீதம் ஆகும். இது நடப்பு ஆண்டுக்குள் 25 சதவீதமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி மதிப்புடைய ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 60 ஆயிரம் கோடியாக இருந்தது.

ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, இந்தியாவின் ஐபோன்கள் ஏற்றுமதியைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பு வந்த உடனேயே, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வியாழக்கிழமை 9.3 சதவீதம் சரிந்தது. 2020 க்குப் பிறகு முதல் முறையாக இந்த வீழ்ச்சியை ஆப்பிள் பங்குகள் சந்தித்தன.

இறக்குமதி வரிகளை ஈடுகட்ட ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று கூறப்படுகிறது. கட்டணக் கொள்கை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

அமெரிக்காவில் ஐபோன்  விலை 43 சதவீதம் வரை உயரக்கூடும் என்று Rosenblatt Securities தெரிவித்துள்ளது. ஐபோன் 16இன் அடிப்படை மாடலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 68 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆப்பிள் நிறுவனம் வரி விதிப்பு சுமையை ஐபோன் விலையுடன் சேர்த்தால், அதன் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். அதேபோல் பிரீமியம் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் விலை சுமார் 2 லட்சம் ரூபாய் ஆகும்.

வரிச் சுமையை  வாடிக்கையாளர்கள் மீது திணித்தால், ஐபோன் விற்பனையில் சரிவு ஏற்படும்.  ஏற்கனவே பல முக்கிய சந்தைகளில் ஆப்பிளின் விற்பனை குறைந்து வருகிறது.  ஐபோன் AI நுண்ணறிவு அம்சங்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.

இந்நிலையில், ஐபோன் விலையும் அதிகரித்தால், ஐபோன் மோகத்தை விட்டுவிட்டு, வேறு ஸ்மார்ட் போன்களை நோக்கி மக்கள் திரும்புவார்கள் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINapple iphonei phone saled in indiaTrump's 'reciprocal tax': iPhone price at Rs 2 lakh?I phone news
Advertisement
Next Article