ட்ரம்ப் அடுத்த அதிரடி - அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை ரத்து? - சிறப்பு கட்டுரை!
அமெரிக்காவில் பிறப்புரிமையால் குடியுரிமை வழங்கப்படுவது என்பது அபத்தமானது என்றும், அதை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாகவும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த முடிவு, இந்தியர்களை எப்படி பாதிக்கும்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பின், 13வது, 14வது மற்றும் 15வது சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த முக்கியமான சட்ட திருத்தங்கள், விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்குச் சமத்துவத்தை வழங்கின.
1863ம் ஆண்டில் அதிபர் ஆபிரகாம் லிங்கன் வெளியிட்ட விடுதலைப் பிரகடனம் கூட்டமைப்பு மாநிலங்களில் வாழ்ந்த அடிமைகளை விடுவித்தது என்றாலும், இந்த பிரகடனம் சட்டமாக இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியலமைப்பின் 13வது திருத்தம் அடிமைத்தனத்தை அதிகாரப்பூர்வமாக ஒழித்தது.
14வது திருத்தம், பூர்வீக அமெரிக்கர்களைத் தவிர்த்து "அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும்" குடியுரிமை வழங்கிய சட்டம் திருத்தம் இதுவாகும். இந்த சட்ட திருத்தம், விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கு, குடியுரிமையை உறுதிப்படுத்தியது மற்றும் குடிமக்களாக அவர்களின் உரிமைகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கியது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்த 14 வது சட்ட திருத்தத்தைத் தான், அபத்தமானது என்று கூறியிருக்கிறார்.அதன்படி, வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்றவுடன் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
உலகின் முதன்மையான பல நாடுகளில் இவ்வாறான சட்டம் இல்லை என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவில் இந்த சட்டம், தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமெரிக்க குடிமகனாக மாறுவதற்குக் கடுமையான தரக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பால் சுமார் 1.6 மில்லியன் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆண்டின் ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவில் சுமார் 4.8 மில்லியன் இந்திய-அமெரிக்கர்கள் வாழ்கின்றனர். அதில், சுமார் 1.6 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆவார்கள். இது அமெரிக்காவில் வாழும் மொத்த இந்திய அமெரிக்கர்களில் 34 சதவிகிதம் ஆகும்.
தற்போதைய அமெரிக்க அரசியல் அமைப்பின்படி, இவர்கள் அமெரிக்க குடிமக்கள். அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத் திருத்தம் நீக்கப்பட்டால், 1.6 மில்லியன் இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில், 18 வயதுக்குட்பட்ட 5.5 மில்லியன் குழந்தைகள், குறைந்தபட்சம் ஒரு ஆவணமற்ற பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க குடிமக்கள்.ட்ரம்பின் அறிவிப்பால், இந்த குழந்தைகளின் அமெரிக்க உரிமையும் கேள்விக்குள்ளாகி உள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபரால், அரசியலமைப்பை திருத்த முடியாது என்றும் வேண்டுமானால் ஒரு சிறப்பு ஆணை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.ஒருவேளை அதிபராக பொறுப்பேற்றதும், ட்ரம்ப், இதற்கான சிறப்பு ஆணையைப் பிறப்பித்தால், அது 14வது சட்டத் திருத்தத்தை மீறுவதாகவே அமையும் என்றும் கூறப்படுகிறது.
பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோதக் குடியேற்றத்தை அதிகப்படுத்தும் என்றும், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.