ட்ரம்ப் 2.0, இந்திய பங்குச் சந்தை சரியுமா? சமாளிக்குமா ? - சிறப்பு கட்டுரை!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் நாளில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ட்ரம்பின் இரண்டாவது பதவி காலத்தில், இந்திய பங்கு சந்தைகளில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் ? எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும் ? என்பது ஒரு விவாத பொருளாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நிர்வாக கொள்கை முடிவுகள், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று ஏற்கெனவே உலக வங்கி எச்சரித்துள்ளது.
அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் " அமெரிக்கா முதலில் " என்ற ட்ரம்பின் கொள்கை, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சவாலாக அமையும் என்றாலும் இந்தியாவுக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்திருப்பதால், அமெரிக்காவில் ஏற்படும் எந்தவொரு கொள்கை மாற்றங்களும் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. கடந்தாண்டு, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 18 சதவீதம், அமெரிக்க ஏற்றுமதியாகும்.
ட்ரம்ப் 1.0 ஆட்சியில், அமெரிக்க உற்பத்தியைப் பாதுகாக்கும் நோக்கில் கிட்டத்தட்ட அமெரிக்காவுடன் வர்த்தக பங்குதாரராக இருந்த எல்லா நாடுகளின் மீதும் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. உதாரணமாக, உலகம் முழுவதிலுமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாஷிங் மெஷின்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.
முன்னதாக, உலக அளவிலான இறக்குமதிகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களைத் தடுக்கும் வரை கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, சீன பொருள்களின் இறக்குமதிகளுக்கு 60 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் இந்தியாவை குறிப்பிடவில்லை என்றாலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீதான வரிகளும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக,அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால், மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில்,பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்க உற்பத்தியாளர்களுடன் நேரடியாக போட்டி போடும், இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிப்படைவார்கள் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இது ஒரு புறம் என்றால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை ட்ரம்ப் உயர்த்துவதால், அது இந்தியாவுக்கு மறைமுகமாக பயனளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தங்கள் விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்தவும், குறைந்த விலையில் உற்பத்தியை பெருக்கவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு மாற்றாக அமையும் என்று கூறுகிறார்கள். குறிப்பாக, இந்திய மின்னணுவியல், உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் ஆட்டோ மொபைல் துறைகள் பெரிய அளவில் அமெரிக்க சந்தையில் கோலோச்சும் என்றும் கூறப் படுகிறது.
டிரம்பின் புதைபடிவ எரிபொருள் கொள்கை காரணமாக ஆசியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மாற்றம் ஏற்படலாம் என்றும், இந்தியாவின் பரந்த பசுமை எரிசக்தி முயற்சிகளுக்குத் தடையாக கூட அமையலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால், வரும் வாரங்களில், இந்தியாவின் சூரிய மற்றும் பிற பசுமை எரிசக்தி பங்குகள் அழுத்தத்தை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. மேலும்,எரிசக்தி சுதந்திரத்தை வளர்ப்பதில் டிரம்ப் அதிகம் கவனம் செலுத்துவது, அமெரிக்க-இந்தியா எரிசக்தி கூட்டாண்மைகளை மேம்படுத்த உதவலாம் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் அமெரிக்க-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை ட்ரம்ப் மேம்படுத்துவார் என்பதால்,இந்தியாவின் இராணுவத் துறை சார்ந்த வணிகங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணும் என்று கூறப்படுகிறது.
டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கை காரணமாக இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பு மையங்கள் உருவாகும். இதனால், இந்திய ஃபின்டெக் நிறுவனங்களுக்கும் வளர்ச்சியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
2017ம் ஆண்டு, முதன்முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன், தனது முதல் வெளியுறவுக் கொள்கையாக சீனாவுடன் கடுமையான போக்கை கடைபிடித்தார். ட்ரம்ப் 2.0 நிர்வாகத்திலும் அதே கொள்கை தொடரும். எனவே, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் ரயில் தளவாடங்களுக்கான போன்றவற்றில் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்.
சீனாவுக்கு பதிலாக இந்தியாவுக்கே ட்ரம்ப் முன்னுரிமை அதிகம் வழங்குவது உறுதி என்பதால் இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. எனவே ட்ரம்ப் இரண்டாவது ஆட்சி காலத்தில் இந்திய பங்கு சந்தை வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டு பங்களிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.