தஞ்சையில் கனமழை - ஒரே நாளில் 37 வீடுகள் சேதம்!
தஞ்சாவூரில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 37 வீடுகள் சேதமடைந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திவான் நகர் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 37 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மேலாய்க்குடி கிராமத்தில் வசித்துவரும் பால்ராஜ் என்பவருடைய வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பால்ராஜின் மகள் கீர்த்திகா மீது சுவர் விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.