தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை - நீரில் மூழ்கிய 32,000 ஏக்கர் பயிர்கள்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை பெய்ததது. இதன் காரணமாக ஒரத்தநாடு, அம்மாபேட்டை, காட்டூர், ஒக்கநாடு, கீழையூர், திருவையாறு, பூதலூர், செங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
சுமார் 32,000 ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் புகுந்ததன் காரணமாக நடவு நட்டு ஒரு மாதமான பயிர், மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
காட்டூர், வாழமரக்கோட்டை, கரைமேண்டார், கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரிய ஏரி வாய்க்கால் தூர்வாராததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாகவும் அரசு உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்த்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.