தஞ்சையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
தஞ்சையில் பெண் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனை பகுதியை சேர்ந்த ரமணி, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவரும் கடந்த 1 அரை வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இவர்களின் காதலை ஏற்க ரமணியின் பெற்றோர் மறுத்ததால், மதன்குமார் உடனான காதலை ரமணி கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், ரமணி பணியாற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஓய்வறையில் இருந்த ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ரமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஆகியோர் ஆசிரியை ரமணியின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் கோவை செழியனை சூழ்ந்த அவர்கள், உடற்கூராய்வு முடிந்தவுடன் உடனடியாக உடலை பெற்றுச்செல்லுமாறு காவல்துறையினர் தங்களை நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினர். பின்னர் அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் கோவை செழியன், இந்த சம்பவம் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து, உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியை ரமணியின் உடலுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆசிரியை ரமணியின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான மல்லிப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டது.