தஞ்சையில் தொடர் மழை - 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்பு!
தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாப்பேட்டை, புத்துர், சாலியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், நாற்று நட்டு 30 நாட்களேயான சம்பா தாளடி பயிர்கள் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கவுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதிகளில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதால், மழைநீர் வடிய வழியின்றி விளை நிலங்களில் தேங்கி நிற்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கீடு செய்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.