தஞ்சை அருகே மினி பேருந்து ஓட்டுநர் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலை மறியல்!
தஞ்சாவூர் அருகே முகமூடி அணிந்து சென்ற கும்பல் மினி பேருந்து ஓட்டுநரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பசுபதிகோயிலை சேர்ந்த சிவா மினி பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். மாலை அய்யம்பேட்டை சாலை தெருவில் மினி பேருந்தை நிறுத்திவிட்டு, கடையில் டீ அருந்திவிட்டு வந்திருக்கிறார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ஓட்டுநர் சிவாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.