தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பணி நியமன விவகாரம் - விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு!
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக திருவள்ளுவன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக்காலம் டிசம்பர் 12-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2017-18-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பாஸ்கரன் இருந்தபோது, பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் துணைவேந்தர் வழங்கிய விளக்கத்தில் திருப்தி இல்லை எனவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறி துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.