தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுவதால், அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும்,
இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவித்துள்ளது.