செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தடைபட்ட சிகிச்சை : பறிபோன 3 உயிர்கள் - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Jan 02, 2025 IST | Murugesan M

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், விபத்தில் சிக்கிய 3 பேர் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

சாலை விபத்தில் சிக்கிய 3 பேர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் தமிழகத்தின் தென் மாவட்டங்களுள் ஒன்றான ராமநாதபுரத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2-ம் தளத்தில், மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி புகையால் சூழப்பட்டு நோயாளிகளை கடும் சிரமத்திற்குள்ளாக்க, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியது.

Advertisement

நோயாளிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாவதை தடுக்க மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, உடனடியாக அவர்களை முதல் தளத்திற்கு மாற்றும் வேலையில் இறங்கினர். இருண்ட கட்டடத்தினுள் டார்ச் வெளிச்சத்திற்கு இடையே ஒன்றன்பின் ஒருவராக அனைத்து நோயாளிகளும் முதல் தளத்திற்கு அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். இடப்பற்றாக்குறையால் சிலர் அருகில் உள்ள பழைய மருத்துவமனை கட்டடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழப்புகளை தவிர்த்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முன், அன்றிரவு வழுதூர் அருகே அவசர சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனமும், அங்குள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிவிட்டு வெளியே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இதில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடம் வந்த போலீசார் ஆம்புலன்ஸினுள் சிக்கிய மூவரையும் போராடி மீட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனையை அடைந்தபோது, அங்கு தீவிபத்து காரணமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அம்மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 150 கோடி ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் சர்வதேச தரத்தில் மருத்துவ உபகரணங்களும், முதலுதவி மையங்களும் உள்ளதாக சொல்லப்பட்டது.

இருப்பினும் அந்த கட்டடத்தில் ஏற்பட்ட சிறிய மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதும், அந்த சலசலப்பிற்கு இடையே விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூவர், உடனடி சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்திருப்பதும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Tags :
ambulance accidentFEATUREDMAINelectrical leakage108 ambulanceRamanathapuram Government Medical College Hospitalhospital staffVazhudur
Advertisement
Next Article