செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

'தன்பாலின' திருமணங்களுக்கு அங்கீகாரம் : திருமண சமத்துவத்தை சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து!

06:05 AM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தென்கிழக்கு ஆசியாவிலேயே தன்பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கி, திருமண சமத்துவத்தை அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

உலக சுற்றுலா தலங்களுள் ஒன்றாக கருதப்படும் தாய்லாந்து நாட்டில் திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் மசோதா நடைமுறைக்கு வந்த நிலையில், நூற்றுக்கணக்கான தன்பாலின ஜோடிகள் அங்குள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் முன்பு வரிசைகட்டி நின்று பெருமகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டனர்.

பிரபல தாய்லாந்து நடிகர்களான APIWATSAYREE மற்றும் SAPPANYOO PANATKOOL ஆகியோர் ஒரே வண்ண ஆடையில் தோன்றி, பேங்காக்கில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் தன்பாலின திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பிங்க் நிறத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட திருமண சான்றிதழ்களை கையில் ஏந்தியபடி, இருவரும் அருகருகே நின்று ஆனந்த கண்ணீர் மல்க புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

Advertisement

APIWATSAYREE - SAPPANYOO PANATKOOL போன்ற நூற்றுக்கணக்கான தன்பாலின தம்பதிகளின் பல ஆண்டு கனவு, தற்போது நினைவாகியுள்ளதால் அந்நாட்டில் தன்பாலின சேர்க்கையாளர்கள் உணர்ச்சிப்பூரிப்பில் திளைத்து வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டில் திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் மசோதா அமலுக்கு வந்துள்ள நிலையில், பிற தம்பதிகளைப்போல நிச்சயதார்த்தம் செய்து திருமண பந்தத்தில் இணைவது, சொத்துக்களை நிர்வகிப்பது, பரம்பரை உரிமை மற்றும் குழந்தைகளை தத்தெடுப்பது போன்ற உரிமைகளை தன்பாலின தம்பதிகளும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் மைல்கல்லை தன்பாலின தம்பதிகள் அத்தனை சாதாரணமாக கடந்துவிடவில்லை. பெரும் போராட்டங்களை சந்தித்தே திருமண அங்கீகாரம் என்ற சுதந்திரத்தை அவர்கள் தங்கள் வசமாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தன்பாலின சேர்க்கையாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் நடத்திய பலகட்ட போராட்டங்களே இந்த வெற்றிக்கு வித்திட்டன.

அதன் பலனாக கடந்த 2024-ம் ஆண்டு, ஜூன் மாதம் திருமண சமத்துவ மசோதாவுக்கு ஆதரவாக செனட்டில் 130 - 4 என்ற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு, சட்டம் இயற்றுபவர்களால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து செனட் குழுவுக்கும், நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்ட திருமண சமத்துவ மசோதா, பின்னர் மன்னரிடமிருந்து அரச ஒப்புதலையும் பெற்றது.

திருமண சமத்துவ மசோதாவை நிறைவேற்றியிருப்பதன் மூலம், தாய்லாந்து நாடு தன்பாலின தம்பதிகளின் புகலிடமாக மாறியிருப்பதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது. இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாகவும், ஆசியாவில் தாய்வான் மற்றும் நேபாளத்துக்கு அடுத்தபடியாக 3-வது நாடாகவும் தாய்லாந்து உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவிலும் தன்பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அத்தகைய சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் எல்லைக்கு உட்பட்டது எனக்கூறி தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் தன்பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டாலும், அவர்கள் திருமணம் செய்துகொள்வது என்பது சட்டவிரோதமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
marriage equalityFEATUREDMAINthailandRecognition of 'same-sex' marriages: Thailand legalized marriage equality!'same-sex' marriages
Advertisement