செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!

08:05 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்துப்பட்டியைப் போலவே கொடைக்கானலுக்கு அருகே உள்ள வெள்ளை கவி கிராமம் எந்தவித தொடர்புமின்றி வசதியுமின்றி தத்தளிக்கிறது. குடிநீர், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவிக்கும் வெள்ளை கவி கிராம மக்களின் வேதனையை தற்போது பார்க்கலாம்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வெள்ளை கவி கிராமம். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக்க விளங்கும் கொடைக்கானல் உருவாவதற்கு முன்பாகவே தோன்றிய இந்த வெள்ளை கவி கிராமம் தற்போது வரை முறையான சாலைவசதி கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது.

கொடைக்கானலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணித்து அங்கிருந்து மலைப்பாதை வழியாகவும், வனப்பகுதி வழியாகவும் குண்டும் குழியுமான பாதையைக் கடந்து வெள்ளைக் கவி கிராமத்தை அடைந்தது நமது தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சி குழு...

Advertisement

பத்து வருடம்... இருபது வருடமல்ல கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வரும் வெள்ளை கவி மக்கள் அவசரத் தேவைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கூட நடைப்பயணமாக மட்டுமே செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் டோலி கட்டி மட்டுமே தூக்கிச் செல்லக்கூடிய அவல நிலையே இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் இப்பகுதி மக்கள், கடின உழைப்பினால் விளைய வைத்த விளைபொருட்களையும் கொண்டு செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான பள்ளிகள், தொலைத் தொடர்பு வசதிகள், சுத்தமான குடிநீர் என எந்தவித வசதியுமில்லாதவர்களாக வசித்து வருகின்றனர் வெள்ளை கவி கிராம மக்கள்.

ஒவ்வொரு தேர்தலின் போது  வாக்குகளைப் பெறுவதற்காகத் தேடி வரும் அரசியல் கட்சிகள், தேர்தலுக்குப் பின் தங்களை முழுமையாக  மறந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் மிகுந்த மன வேதனையை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகின்றனர்.

சிட்டிசன் திரைப்படத்தில் இருக்கும் அத்துப்பட்டியைப் போல எந்தவித சாலைத் தொடர்புமின்றி கொடைக்கானலின் பின்புறமிருக்கும் வெள்ளைக் கவி கிராமத்திற்கு போதுமான சாலைவசதியையும், அங்கு வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

Advertisement
Tags :
FEATUREDMAINAthipatti Vellai Kavi VillageTamil Nadu: People desperately seeking basic amenitiesதமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம்மக்கள்
Advertisement