தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி - பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
Advertisement
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில், புயல் பாதிப்புகளை சீரமைக்க, மாநில பேரிடர் மீட்பு நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு 944 கோடியே 80 லட்சம் ரூபாயை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மோடி அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து 944 கோடியே 80 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், மோடி அரசு எப்போதும் தமிழக மக்களின் நலன்களுக்காகவே நிற்கிறது என்பதை இந்த விரைவான நடவடிக்கை மூலம் எடுத்துக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்
இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய இத்தகைய பாதிப்புகளிலிருந்து மீள்கின்ற வகையில், பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், தமிழக மக்கள் அனைவரது சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.