தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பொது சுகாதார இயக்கம் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் ஒட்டுமொத்த கருவுறுதல் வீதம் கடந்த 5 ஆண்டுகளில் 7 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது.
இது சற்று ஆறுதலை அளித்தாலும், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களிடையே கருவுறுதல் வீதம் கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அந்த வகையில், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகளின் எண்ணிக்கை கடந்த 2019-2020-இல் 11 ஆயிரத்து 772 ஆக இருந்த நிலையில், 2023-2024-ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.
முன்கூட்டியே திருமணம் நடத்தி வைப்பது, சமூக அழுத்தம் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட காரணங்களால் பதின் பருவப் பெண்களிடையே கருவுறுதல் வீதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள்,
இதற்கு முடிவுகட்ட வேண்டுமானால் பள்ளிப் பாடத் திட்டத்தில் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் பதின் பருவப் பெண்கள் கருவுறுதலில் நாகை மாவட்டம் 3 புள்ளி 3 சதவீதத்துடன் முதலிடத்திலும், தேனி, பெரம்பலூர் மாவட்டங்கள் முறையே 2 புள்ளி 4 மற்றும் 2 புள்ளி 3 சதவீதத்துடன் அடுத்த இடங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.