தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று!
தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
அதன்படி, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல், கிண்டியில் உள்ள மற்றொரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கும் HMPV வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
HMPV வகை தொற்று ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது என்றும், புதிதாக உருமாறிய தொற்று எதுவும் தற்போது பரவவில்லை கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவகால காய்ச்சலே மக்களுக்கு ஏற்படுவதால் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும், HMPV வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக பொது இடத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல், குஜராத்திலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 7 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.