தமிழகத்தில் ரயில் திட்த்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் - அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Advertisement
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா என வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் அஷ்விணி வைஸ்ணவ் எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார். அதில், ரயில் திட்டங்களை செயல்படுத்த நிலத்தை கையகப்படுத்தும்போது, அதை மதிப்பிட்டு இழப்பீட்டுத் தொகையை ரயில்வே துறையிடம் மாநில அரசு தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அந்தத் தொகையை மாவட்ட நிலம் கையகப்படுத்துதல் ஆணையத்தின் கணக்கில் ரயில்வே துறை டெபாசிட் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டங்களின் வெற்றி மாநில அரசின் ஆதரவில்தான் அடங்கியுள்ளது எனவும் அஷ்விணி வைஷ்ணவ் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்துக்கு தேவைப்படும் 273 ஹெக்டேர் நிலத்தில், 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு - புத்தூர் புதிய பாதை திட்டத்துக்கு தேவைப்படும் 189 ஹெக்டேர், மொரப்பூர் - தருமபுரி திட்டத்துக்கு தேவைப்படும் 93 ஹெக்டேர், மன்னார்குடி - பட்டுக்கோட்டை திட்டத்துக்கு தேவைப்படும் 152 ஹெக்டேர், தஞ்சை - பட்டுக்கோட்டை திட்டத்துக்கு தேவைப்படும் 196 ஹெக்டேர் திட்டத்துக்கு ஒரு ஹெக்டேர் கூட கையகப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.