தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Advertisement
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் நிலையையும் பதவியையும் மறந்து தன் மீது விமர்சனங்கள் வைத்து வருவதாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
என்னைப் பற்றிமுதல்வர் ஸ்டாலின் பல விமர்சனங்களை கடந்த சில நாட்களாக முன்வைத்து வருகிறார். முதல்வர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் நான் அவரைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசியதாக தெரிவித்துள்ளார்.
நான் முதல்வராக இருந்த போது, ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என்னை பற்றி தனிப்பட்ட வகையில் பல விமர்சனங்களை செய்துள்ளார்.ஊர்ந்து, பறந்து என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைபெற்ற கூட்டத்திலும் கரப்பான்பூச்சி என கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது பதவியையும் நிலையையும் மறந்து இது போன்ற விமர்சனங்களை செய்து வருகிறார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் அமல்படுத்த திட்டங்களுக்கும்தான் தற்போது திமுக ஆட்சி காலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக பில்லூர் மூன்று கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், உக்கடம் மேம்பாலம், ஐ டி பூங்கா ஆகியவற்றுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், அத்திக்கடவு அவினாசி இரண்டாம் கட்ட திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம், மேற்கு புறவழி சாலை திட்டம் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. சில திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.