தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து!
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அருப்புக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து 875 கோடி ரூபாய் மதிப்பில் 2016ஆம் ஆண்டு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
போதிய நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில், திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் வேண்டாம் என்று கூறி தமிழக அரசிடமிருந்து எழுத்துபூா்வமான கடிதம் அனுப்பப்பட்டதாகவும்.
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்நிலையில், தமிழக அரசின் செயல்பாட்டிற்கு அருப்புக்கோட்டை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், அகல ரயில் பாதை திட்டத்தால் அருப்புக்கோட்டையில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும், இந்த திட்டத்தை மீண்டும் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல ரயில் போக்குவரத்து இல்லாததால் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வருவதாக ரயில் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.