தமிழக சட்டசபை நாளை கூடுகிறது - துணை பட்ஜெட் தாக்கல்!
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
தமிழக சட்டசபை கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது. மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் நாளில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.
ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை கூடியது.
பேரவை விதிகளின்படி சட்டப்பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த கூட்டத்தொடரில் கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.