தமிழக சட்டப்பேரவையை புறக்கணித்தார் ஆளுநர் ரவி!
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம்.
இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வரவேற்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி தமிழக அரசின் உரையை வாசிக்காமல் திடீரென அவையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, ஆளுநர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவிக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.