தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! : இலங்கை அதிபர்
மீனவர்கள் பிரச்னைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
Advertisement
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையை எந்தவொரு நாடும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என அநுர குமார திசநாயக திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு இலங்கை அதிபர் தீர்வு காண்பார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வுக்கான அரசியல் சாசன சட்டத்திருத்தத்தை அநுர குமார திசாநாயக அமல்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தது மட்டுமன்றி, சுருக்குமடி வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதால் மீன்வளம் அழியும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.