தமிழக ரயில்வே திட்டப் பணிகள் - நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசு தாமதம் செய்வதாக புகார்!
தமிழக ரயில் திட்டங்களுக்கு, 3 ஆயிரத்து 389 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில் 866 ஹெக்டர் நிலம் மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தி தந்துள்ளதால் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே திட்டங்கள் நாடு முழுதும் மண்டல வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரயில்வேயின் தேவைகள், மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகள் ஆகியவற்றை பொறுத்தே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்துார், மொரப்பூர் - தருமபுரி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை உட்பட 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 14 ஆயிரத்து 669 கோடி ரூபாயில் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும், தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், இருப்பினும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் பணிகளை முடிக்க முடியாத சூழல் உருவாகுவதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழக ரயில் திட்டங்களுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 389 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 866 ஹெக்டர் நிலம் மட்டுமே மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாக ரயில்வே திட்டங்களும் மெதுவாக நடைபெறுவதாக கூறியுள்ள ரயில்வே அதிகாரிகள், தமிழக அரசும், ரயில்வேயுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.