தமிழுக்கு உழைத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை புகழ் கரையாது - அண்ணாமலை புகழாரம்!
தன்னலம் கருதாது தமிழுக்கு உழைத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் புகழ் கரையாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், "நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதைவிட என் புதைகுழியே அதிகமாகத் தமிழை வளர்க்கும்!” என்று தன் மரண அறிக்கையில் வெளியிட்டு எதிர்கொண்ட தீர்க்கதரிசி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் தலைசிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக, சிந்தனையாளராக, கற்றாய்ந்த தமிழ் அறிஞராக, அரசியல்வாதியாக, பத்திரிக்கையாளராக, பல அமைப்புக்களின் தலைவராக, திகழ்ந்தவர்.
97 ஆம் வயதில் முத்தமிழ் காவலர் மறையும் போது வெளியிட்ட கடைசி அறிக்கையில் "இரு மொழிக் கொள்கையால் தமிழ் மொழி முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மும்மொழி திட்டத்தால் தமிழ் கட்டாயமாக்கப்படுமானால் அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். என் உயிர் போகும் முன் தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்படுமானால், நான் நிம்மதியாகச் சாவேன்…" என்று கூறி இருந்தார்.
தேசிய கல்வித் திட்டத்தால் முத்தமிழ் காவலரின் கனவை நினைவாக்கியவர் பாரதப் பிரதமர் மோடிஅவர்கள். தன்னலம் கருதாது தமிழுக்கு உழைத்த முத்தமிழ்க் காவலர் புகழ் கரையாது, மறையாது, குறையாது. காலங்களைக் கடந்து தமிழாய் வாழும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.