தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - கொடைக்கானல் கருவேலம்பட்டியில் அடிப்படை வசதி பணிகள் தொடக்கம்!
தமிழ் ஜனம் தொலைக்காட்சி எதிரொலி காரணமாக, கொடைக்கானலில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கருவேலம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணிகளில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கருவேலம் பட்டி கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகளே இல்லாமல் வசித்து வருகின்றனர். ஆரம்ப பள்ளிக்கூடம் இருந்தும் ஆசிரியர்கள் வரவில்லை என்று வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி மலைவாழ் மக்களின் குறைகளையும், தேவைகளையும் பதிவு செய்த நிலையில், செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, கருவேலம் பட்டி மலைவாழ் கிராமத்திற்கு, உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சென்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வட கவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதிகாரிகள் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய தேவையை கேட்டறிந்தனர்.
இதற்கிடையே கருவேலம் பட்டி மலைவாழ் மக்கள் சந்தித்து வரும் பாதிப்புகளை செய்தியாக ஒளிப்பரப்பிய தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.