தருமபுரம் ஆதீனத்திற்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு!
திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு வழியெங்கும் பக்தர்கள் பூரணகும்ப மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தருமபுரம் ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்ட 28 கோயில்களுள் திருவையாறு ஐயாறப்பர் கோயிலும் ஒன்றாகும். திருநாவுக்கரசருக்கு கயிலைக் காட்சி அருளிய சிறப்புடைய இந்த கோயிலில் பிப்ரவரி 3ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீனத்திருமடத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார்.
அடியவர்கள் புடைசூழ, யானை, குதிரை, ஆட்டுக்கிடா ஆகிய மங்கல சின்னங்கள் முன்செல்ல, வாத்தியங்கள் முழங்க பாதயாத்திரையாக புறப்பட்ட தருமபுர ஆதீனத்திற்கு வழியெங்கும் பக்தர்கள் பூரணகும்ப மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.