சேலம், தருமபுரியில் வெளுத்து வாங்கிய மழை - குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்!
தருமபுரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Advertisement
ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர், ஆவின் நகர், நந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சேலத்தில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமணிமுத்தாரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், சின்னேரிவாயக்காடு பகுதியில் இருந்து திருமணிமுத்தாரில் கலக்கும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.
இதனால் சினிமா நகர், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்த மக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.