சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு செய்யப்ட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், : "சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
DD Tamilசெய்தியாளர் கெளதம் மற்றும் ஒளிப்பதிவாளர் சுரேந்தர் ஆகியேரை மிக மோசமாகவும், தரக்குறைவாகவும் நடத்தியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் இணை இயக்குநர் மேகவர்மன் மற்றும் செய்தித்தொடர்பு அதிகாரி முத்தமிழ் செல்வன் ஆகியோர் மீது செய்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது சபாநாயகர் அப்பாவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் முடிவு செய்யத் தொடங்கி விட்டால் ஜனநாயகம் சீரழிந்து விடும். இதுமட்டுமின்றி நேற்று தமிழக சட்டசபை நிகழ்வுகளை ஒலிபரப்புவது, செய்தியாக வெளியிடுவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
பத்திரிகைகள், ஊடகங்கள் என்ன செய்தியை வெளியிட வேண்டும் என்பதை திமுக அரசு முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறி போகிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாமே திமுக அரசு பதட்டத்தில் இருப்பதையே உணர்த்துகிறது.
மக்களிடம் எந்த தகவலும் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் பெரும் முனைப்புடன் திமுக அரசும் அவர்களுக்காக பணியாற்றும் அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இது பெரும் கண்டனத்துக்குரியது.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதுபோல தவறுகள், அராஜக செயல்களை எத்தனை நாட்களுக்கு மூடி மறைக்க இயலும். எனவே பிரச்சனைகளை மறைக்க முயலாமல் அதற்கு தீர்வு காண தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.