தளபதி முதல் தலைவர் வரை - நடிகர் விஜய் திரைத்துறையில் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!
அரசியலில் சாதிக்க களமிறங்கியுள்ள நடிகர் விஜய், திரைத்துறையில் சாதித்தது எப்படி என்பது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
Advertisement
எம்ஜிஆருக்கு பிறகு எந்த நடிகரும் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்ததில்லை என்பது வரலாறாக உள்ளது. அந்த வரலாற்றை மாற்றியமைக்க பல்வேறு காலங்களில் பல்வேறு நடிகர்கள் முயன்றுள்ளனர். ஆனால், அந்த வரலாறு வரலாறாகவே உள்ளது. இந்த சூழலில்தான், நடிகர் விஜய் அரசியலில் களம் புகுந்துள்ளார்.
இன்றைய தேதிக்கு, தளபதி விஜய் என்ற பெயர் திரையில் தோன்றினால், அதனை பார்த்து ஆர்ப்பரிக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் நடிக்கும் படங்களும் சர்வசாதாரணமாக 300 கோடி, 400 கோடி ரூபாய் என வசூல் வேட்டை நடத்துகின்றன. ஆனால், விஜய் தொடக்கத்தில் சினிமா பிரவேசம் செய்தபோது, இந்த வரவேற்பில், புள்ளி ஒரு சதவீதம் கூட இருக்கவில்லை.
விஜய் முதன்முதலாக ஹீரோவாக நடித்த நாளைய தீர்ப்பு திரைப்படம், அவரின் 18ஆவது வயதில் வெளியானது. படம் படுதோல்வி. அந்த படத்தை சீண்டக்கூட அப்போது ஆள் இல்லை. படம் குறித்து டன் கணக்கில் எதிர்மறை விமர்சனங்கள்வேறு வந்து குவிந்தன. தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று, நாளைய தீர்ப்பு படத்தை கிழித்து தொங்க விட்டது. "இயக்குநரின் மகன் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம் என்றாகிவிட்டது. இந்த ஹீரோவின் முகம் மக்களை சென்றடையும் என இயக்குநர் எப்படி நினைத்தார்." என விஜய்யின் தோற்றம் குறித்தும் அந்த இதழ் கிண்டல் செய்திருந்தது.
அந்த கட்டுரையை படித்த விஜய், அன்று இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்ததாக, அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். தனது திரைப்பயணத்தை இப்படி தொடங்கிய விஜய், இன்று கோலிவுட் மட்டுமல்ல இந்தியா சினிமாவே வியந்து பார்க்கும் நடிகராக விஸ்வரூம் எடுத்து நிற்கிறார்.
நாளைய தீர்ப்பு படம் மட்டுமல்ல, அதனை தொடர்ந்து விஜய் நடித்த அடுத்தடுத்த படங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு FLOP ஆகின. அவரின் படங்கள் வெளியான திரையரங்குகள் காற்று வாங்கின. இந்த நிலையை மாற்றி, விஜய்யின் படத்திற்கு பல்லாயிரக்கணக்கில் பார்வையாளர்களை அழைத்து வந்த முதல் படம், ”பூவே உனக்காக”.
காதலை மையமாக வைத்து தமிழில் டஜன் கணக்கில் அல்ல, டன் கணக்கில் படங்கள் வந்துள்ளன. ஆனால், அவற்றில் மிகச்சில படங்கள் மட்டும்தான் காலத்தை கடந்தும் நிற்கின்றன. அந்த வகையிலும் விஜய்யின் தொடக்க கால படங்களான பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் அவரது திரைப்பயணத்திலும், தமிழ் சினிமா வரலாற்றிலும் தவிர்க்க முடியாத படங்களாக அமைந்தன.
வெறுமனே காதல் படங்களில் நடித்துக்கொண்டு, காதல் பாடல்களுக்கு டூயட் பாடிக்கொண்டிருக்கும் நடிகர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார்கள் என்பது எழுதப்படாத விதி. திரையுலகில் நங்கூரம் பதித்து நிற்க வேண்டுமென்றால், ACTION படங்களில் கட்டாயம் நடித்தே தீர வேண்டும் என்பது மற்றொரு விதி.
எனவே, சாக்லெட் ஹீரோவாக இருந்த விஜய், ACTION ஹீரோவாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைய தேதிக்கு அனல் பறக்கும் பஞ்ச் வசனங்களும், அதிரடி நிறைந்த சண்டைக்காட்சிகளும் இல்லாத விஜய்யின் திரைப்படத்தை நினைத்து பார்க்கவே முடியாது. இதற்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட படம், பகவதி. விஜய் என்ற சாக்லெட் பாயை,
ஆக்ஷன் ஹீரோவாக கோடம்பாக்கத்திற்கு அந்த படம் அறிமுகப்படுத்தியது. ஆனால், பகவதி படத்தின் மூலம் விஜய்க்கு RUNNERUP-தான் கிடைத்தது. ஆக்ஷன் ஹீரோவாக விஜய்யை வின்னராகியது திருமலைதான்.
திருமலை திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட்டே மாறிப்போனது. அதன் பிறகு கிட்டத்தட்ட அவர் நடித்த அனைத்து படங்களுமே ஆக்ஷன் படங்கள்தான். திருமலை படம் அசுர வெற்றி பெற்றிருந்தாலும், விஜய்யை ஏக்ஷன் ஹீரோவாக ஏற்க சில தயங்கினர். அந்த தயக்கத்தை சம்மட்டியை வைத்து தகர்த்தெறிந்தது, கில்லி படமும், அதன் BOXOFFICE வெற்றியும். கில்லி திரைப்படம் விஜய்யை அக்மார்க் ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது.
மேலும், தமிழ் சினிமாவில் முதன்முதலாக 50 கோடி ரூபாய் வசூல் செய்து கோடம்பாக்கத்தையே அந்த படம் வாய்ப்பிளக்க செய்தது.
விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய இடம் வகிக்கும் படம் துப்பாக்கி. மிகவும் ஸ்டைலிஸ்ஸான army officer-ஆக திரையில் தோன்றி அமர்க்களம் செய்திருப்பார் விஜய். 12 ஸ்லீப்பர் செல்களை, 12 ராணுவ வீரர்கள் ஒரு நொடிக்கூட பிசிறு தட்டாமல், சரியாக நெற்றிப்பொட்டில் சுட்டுத்தள்ளும் காட்சி திரையரங்குகளை அதிர செய்தது. விஜய் நடிப்பில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற புதிய ரெக்கார்டையும் அந்த படம் படைத்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் கரம்கோர்த்த கத்தி திரைப்படமும், அனைத்து திரையரங்குகளையும் அல்லுசில்லாக்கியது.
மறுபுறம், விஜய்-அட்லி கூட்டணியும் அடுத்தடுத்து பல BOXOFFICE ரெக்கார்டுகளை படைத்தன. தெறி, மெர்சல் இந்த 2 படங்களுமே விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்தின. ரசிகன் திரைப்படத்தில் இருந்து, பைரவா திரைப்படம் வரை டைட்டில் கார்டில் இளைய தளபதி என்ற அடைமொழியில்தான் விஜய் குறிப்பிடப்பட்டார். மெர்சல் திரைப்படத்தில்தான், முதன்முதலில் "தளபதி" என்ற அடைமொழியுடன் திரையில் தோன்றினார் விஜய்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எல்லாம் விஜய் இன்று இருப்பதுபோல அட்டகாசமாக நடனம் ஆடமாட்டார். சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகுதான் நடனத்திற்கு அவர் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். இன்றைய தேதிக்கு எப்படி ஏக்ஷன் காட்சிகள் இல்லாமல் விஜய்யை வைத்து படம் எடுக்க முடியாதோ, அதேபோல் துள்ளலான நடனம் இல்லாத படங்களை எடுப்பதும் சாத்தியமே இல்லை.
அண்மையில் வெளியான மாஸ்டர், வாரிசு, லியோ என அனைத்து படங்களுமே வசூலில் புதியபுதிய மைல்கற்களை எட்டின. கடைசியாக வெளியான கோட் படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டதாக, படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். விஜய்யின் மார்க்கெட் வேல்யூ எந்த உச்சத்தில் உள்ளது என்பதை இதன் மூலம் எளிதாக அறியலாம்..
200 கோடி சம்பளம் வாங்கும் ஒருவர், வெறுமனே எந்த ஒரு முறையான திட்டமும் இல்லாமல் சினிமாவுக்கு GOODBYE கூறிவிட்டு, அரசியலில் குதிக்க மாட்டார். சினிமாவிற்கு வந்த புதிதில் அடுக்கடுக்காக விமர்சனங்களை சந்தித்த விஜய், அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தற்போது இந்திய சினிமாவில் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதேபோல், அரசியலில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளதையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களையும் தவிடிபொடியாக்கி அவர் அரசியலில் ஜொலிப்பாரா என்பதை 2026ஆம் சட்டப்பேரவை தேர்தல் முடிவு சொல்லும்.