திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் எலும்புமுறிவு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது லிஃப்டில் சிக்கிக்கொண்டவர்கள் தீயில் கருகியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருந்த நோயாளிகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து, பலமணிநேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்த தீ விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி உட்பட7 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், தீ விபத்தில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.