திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு கொட்டு வைத்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றி - அண்ணாமலை
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கொட்டு வைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசின் காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச்சாராயம் தொடர்பாக, திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் திமுக அரசு செயல்பட்டு வந்திருப்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.