திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பலவீனமாக நினைத்து விட்டாரா? - கே. பாலகிருஷ்ணனுக்கு முரசொலி நாளிதழ் கண்டனம்!
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நியாயமான போராட்டங்களுக்கு கூட போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், பாலகிருஷ்ணனுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போட பாலகிருஷ்ணன் தொடங்கி இருப்பதாகவும், வேங்கைவயல் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு கண்டனம் என ஏராளமான போராட்டங்களை நடத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அவர், எந்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது
திமுக பதிலளிக்காமல் இருப்பதையே பாலகிருஷ்ணன் பலவீனமாக நினைத்துவிட்டாரா? எனவும், பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்வது தோழமைக்கான இலக்கணம் அல்ல என்றும் முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.