திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடக்கம்!
கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை உற்சவத்தையொட்டி கொடியேற்ற விழா நடைபெற்றது.
Advertisement
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடங்கியது. இவ்விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள், கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
அப்போது, கொடி மரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10-ம் தேதி விழாவில் ஓலைசப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன காட்சியும்,12-ம் தேதி விழாவில் திருக்கல்யாணமும், 14-ம் தேதி விழாவில் தேரோட்டமும்,15-ம் தேதி விழாவில் கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
நிறைவு நாளான 16 - ம் தேதி விழாவில் விடையாற்றி நிகழ்ச்சியும், இரவு புஷ்ப பல்லாக்குடன் வீதியுலா உற்சவத்துடன் நடைபெற உள்ளது.