திருப்பத்தூரில் தொடர் மழை - குடியிருப்புகளுக்குள் புகுந்த நீர்!
திருப்பத்தூரில் தொடர் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழைப்பொழிவால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், புதுப்பேட்டை சாலையில் உள்ள காந்தி நகர் 4-வது தெருவில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக மழைநீர் வடிகால்வாய் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட காரணம் என தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.