திருப்பரங்குன்றம் மலையை மீட்க மிகப்பெரிய போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் இடம் என்றும், இந்துக்கள் அல்லாதவர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை எனவும், இந்து முன்னணி மாநில செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் மதுரை மாவட்ட மாநகர் மற்றும் புறநகர் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக்கூறி கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மலை மீது கட்டப்பட்டுள்ள தர்கா கட்டடத்தை இனி விரிவாக்கம் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் கார்த்திகேயன், தேச விரோத சக்திகளிடமிருந்து திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்ற இந்து முன்னணி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை, முருகனுக்கு மட்டும் சொந்தமான மலை என அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.