திருமணத்திற்கு ரெடி.. நீங்க ரெடியா...? இந்திய ஆண்களை தேடும் அமெரிக்க பெண் - சிறப்பு தொகுப்பு!
இந்தியருடன் திருமண பந்தம் ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், கும்பமேளாவில் பங்கேற்க 3 மாத சுற்றுலா விசாவில் இந்தியா வரவுள்ளதாகவும் அமெரிக்க பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
Advertisement
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண்ணான இவர் இளமையான மற்றும் அழகான இந்தியரை தனது கணவராக தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வீடியோவில் ஹிந்தி மொழியில் சரளமாக பேசத்தொடங்கும் இளம்பெண், தனது பெயரை ஏஞ்சலினா என்றும், தாம் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமுள்ள இந்தியர்கள் விரைந்து தன்னை தொடர்புகொள்ளுமாறு கூறும் அவர், தான் கும்பமேளாவில் பங்கேற்க 3 மாத சுற்றுலா விசாவில் இந்தியா வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னை அணுகுபவர்களில் தனக்கு பிடித்தவரை உடனே திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ள ஏஞ்சலினா, தன்னிடம் பணத்திற்கு எந்த குறையும் இல்லை என்றும் உண்மையான மற்றும் நம்பிக்கையான ஆணின் துணை மட்டுமே தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விரைவில் இது தொடர்பாக படிவத்தின் லிங்க் ஒன்றை பதிவேற்றவுள்ளதாக உறுதியளித்துள்ள அவர், அதில் தன்னை தொடர்புகொள்ளும் விவரங்கள் அனைத்தும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பகிரப்பட்டுள்ள இன்ஸ்டா கணக்கில் இதேபோன்ற பல வீடியோக்கள் இருப்பதும், பெரும்பாலான வீடியோக்களில் கேட்கும் குரல் ஏஞ்சலினாவின் குரலை ஒத்திருப்பதும் வீடியோவை காண்போருக்கு நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
நவீன AI தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கி மோசடி செய்வது சாத்தியம் என்பதும், அமெரிக்க இளம்பெண் பதிவிட்டுள்ள வீடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
என்னதான் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ள போதிலும், அவற்றையெல்லாம் கடந்து 1 கோடியே 40 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ள இந்த வீடியோ, 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் அள்ளியுள்ளது.
அதேபோல, இந்திய ஆண்கள் பலரின் திருமண முன்மொழிவுகளாலும், அமெரிக்க பெண் இந்தியரை திருமணம் செய்துகொள்ளும் சட்டபூர்வ அணுகுமுறை குறித்த கேள்விகளாலும் கமெண்ட் பகுதி நிரம்பி வழிவதுதான் வேடிக்கையின் உச்சம்.