திருமணம் குறித்த ஆவணப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கு, தனுஷ் தான் காரணம் - நயன்தாரா குற்றச்சாட்டு
தனது திருமணம் குறித்த ஆவணப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கு, நடிகர் தனுஷ்தான் காரணம் என நடிகை நயன்தாரா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல தவறான விஷயங்களை சரிசெய்யவே வெளிப்படையான கடிதத்தை எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருமண ஆவணப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே, பல்வேறு தடைகளைத் தாண்டி ஆவணப் படத்தை வெளியீட்டுக்கு தயார் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால் தானும், தனது கணவரும் மட்டுமின்றி திருமண ஆவணப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள நயன்தாரா,காதல், திருமணம் உள்ளிட்ட தனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், தனது காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அப்படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் ஆவணப்படத்தில் பயன்படுத்த NOC கேட்டு 2 ஆண்டுகளாக போராடியும், தனுஷ் அதற்கு ஒத்துழைக்காமல் இருந்தது மிகுந்த மன வேதனையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தடையில்லா சான்று மறுக்கப்பட்டதுடன் 3 வினாடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள நயன்தாரா, வியாபார ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார்.
தன்மீதான தனிப்பட்ட வெறுப்பின் காரணமான தனுஷின் நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.