திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி - விசாரணையில் தகவல்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட கல் குவாரி கடந்த 2 வருடங்களாக சட்டவிரோதமாக செயல்பட்டு வந்திருப்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
தொலையானூரில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அதிமுக பிரமுகர் ஜெகபர் அலி புகாரளித்தார். இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி மினி லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார். கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மனைவி புகாரளித்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கல் குவாரிக்கு எதிராக புகாரளித்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சம்மந்தப்பட்ட கல் குவாரியின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில், 2 ஆண்டுகளாக கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 18 கோடி ரூபாய் வரை கல்குவாரிக்கு கனிமவளத் துறை அதிகாரிகள் ஏற்கனவே அபராதம் விதித்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.