திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்ததில் இரு வீடுகள் சேதம் - மீட்புப் பணி தீவிரம்!
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக இரு வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள மகாதீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக மலையடிவார பகுதியான வ.உ.சி நகரில் பாறை உருண்டு குடியிருப்புகள் மீது விழுந்தது.
இதில் இரு வீடுகள் பெரும் சேதமடைந்த நிலையில், அந்த வீடுகளில் இருந்த 7 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனும் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.