திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா!
நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 17 நாட்கள் கொண்டாடப்படும் தீபத்திருவிழாவை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவமண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
கடந்த 17 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலை மீது தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி வருகின்ற 26 -ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் மாட வீதிகளில் இழுத்துச் சென்றனர். 2 - வதாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் நடைபெற்றது.
7 -ம் நாளாளான இன்று பஞ்சரதத் தேரோட்டத்தில் வெள்ளி ரதத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணைப் பிளந்தது.