திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!
தெலுங்கு திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.
அல்லு அர்ஜுன் பங்கேற்ற புஷ்பா-2 பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் மகன் தொடர் மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலகினரை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சந்தித்தார். அப்போது சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் தாம் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், திரையுலகினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.
அத்துடன் திரை நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் தெலுங்கு திரைப்பட மேம்பாட்டு கழக தலைவர் தில் ராஜு, நடிகர்கள் நாகார்ஜுனா, வருண் தேஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.