தீபாவளி பண்டிகை - இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4 ஆயிரத்து 900 சிறப்புப் பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கூடுதலாக 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னையிலிருந்து 700 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 330 பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்திலிருந்து பொன்னேரி, திருச்சி, சேலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.