தீபாவளி பண்டிகை - சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்ற தீவிர நடவடிக்கை!
அயோத்தி ராமர் கோயிலில் முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, 8-ஆவது 'தீப உட்சவ' நிகழ்வை நடத்த முழுவீச்சில் தயாராகி வருகிறது. புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலிலும் முதல் முறையாக தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுழலை பாதுகாக்கும் நோக்கில் ராமர் கோயிலை ஒளிரச்செய்ய, அதற்கு உகந்த விளக்குகள் பயன்படுத்தப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீப உட்சவம், அயோத்தி ராமர் கோயில் நுழைவு வாயில் அலங்காரம் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற ஐஜி அஷு சுக்லா மேற்பார்வையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக வரும் 29-ஆம் தேதி முதல், நவம்பர் 1-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்தே இருக்கும் எனவும் உத்தரப்பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.