கரகர....மொறுமொறு...கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் - சிறப்பு கட்டுரை!
தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. பாரம்பரிய சுவை கொண்ட செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான ரகசியம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....
Advertisement
செட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் 56 ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஊர்களையும் உள்ளடக்கியது. அந்த செட்டிநாட்டின் உணவு வகைகளுக்கு அறிமுகம் தேவையில்லை. சமையல் கலைக்கு புகழ் பெற்ற செட்டிநாட்டு பலகாரங்கள், உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவை. வருடம் முழுவதும் தயாரிக்கப்படும் இவ்வகை செட்டிநாட்டு பலகாரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கிச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காரம், இனிப்பு என பல்வேறு பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. லாபத்தை விட தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இன்று வரை இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு எப்போதும் கிராக்கி உண்டு என்கிறார் பலகாரங்கள் தயாரிக்கும் முத்துக் கருப்பி....
அனைத்து செட்டிநாட்டு பலகாரங்களும், இயந்திரங்கள் இல்லாமல் பாரம்பரிய முறையில், உரலில் மாவுகளை இடித்து, கைகளால் முறைப்படி சலித்து பக்குவத்துடன் தயாரிக்கப்படுகின்றன. செட்டிநாட்டு சுவைக்காக, பல இடங்களில் இன்றும் விறகு அடுப்புகளில் தான் பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், சுத்தமான செக்கு எண்ணெய்யில் தயாரிக்கப்படுவதால், உடலுக்கு எந்தக் கெடுதலும் வராது என பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
காரைக்குடியை சுற்றி வசிக்கும் பெண்கள், செட்டிநாட்டு பலகாரங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல பெண்களின் குடிசை தொழிலாகவே இது மாறியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூர், கேரளா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டின் பலகாரங்கள் அனுப்படுகின்றன.
கல்யாண முறுக்கு, 5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட தேன் குழல் முறுக்கு வகைகள், அதிரசம், மண ஓலம் , மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, காரா பூந்தி, மிக்சர் உள்ளிட்ட செட்டிநாடு பலகாரங்கள் மிகவும் பிரபலமானவை என்கிறார் வாடிக்கையாளர் மெய்யப்பன்.
கல்யாண சீர் முதல் வளைகாப்பு சீர், தீபாவளி சீர் என வீட்டு சுப நிகழ்ச்சிகளில். பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்குக் எப்போதும் தனி இடம் உண்டு. மேற்கத்திய பண்டங்களைச் சாப்பிடப் பழகி இருந்தாலும், விசேஷ தினங்களில், சுவையையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரக் கூடிய செட்டிநாடு பலகாரங்களை வாங்குவதில்தான் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.