தூத்துக்குடியில் பலத்த மழை - மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. மேலும், பெருமாள் மலைஅடிவாரத்தில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் சாலைகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே மகிழம்பூரம் தரைப் பாலத்தின் மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மகிழம்பூரம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பேரூரணி அருகே உள்ள தலைப்பாலம் மூழ்கியது.
இதனால், பேரூரணி மற்றும் செக்காரக்குடி கிராமங்கள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்து. மேலும், ஊருக்குள் வெள்ளநீர் புகுந்ததால், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.